திருப்பூரில் பரபரப்பு: பா.ஜனதா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது


திருப்பூரில் பரபரப்பு: பா.ஜனதா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 24 Sept 2020 3:45 PM IST (Updated: 24 Sept 2020 3:39 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பா.ஜனதா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர்-அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பை அடுத்த பாரதிதாசன்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவருடைய மனைவி மேனகா (31) . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி பாரதீய ஜனதா கட்சியின் அங்கேரிபாளையம் மண்டல வர்த்தக பிரிவு துணை தலைவராகவும், மேனகா அதே மண்டலத்தில் மகளிரணி பொது செயலாளராகவும் உள்ளனர். நேற்று மகனுக்கு பிறந்தநாள் என்பதால் கிருஷ்ணமூர்த்தி காலை 5.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று விட்டார்.

பின்னர் அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு மதியம் 12.30 மணிக்கு வீட்டிற்கு கிருஷ்ணமூர்த்தி வந்தார். பின்னர் வீட்டின் வெளிப்புற கேட்டை திறந்தபோது வீட்டு வாசலில் பாட்டில் உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அருகில் சென்று பார்த்தார். அருகில் திரி போன்ற சிறிய துணியும் கிடந்தது. இதனால் பெட்ரோல் குண்டை மர்ம ஆசாமிகள் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, மேனகா மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

குடும்பத்துடன் கிருஷ்ணமூர்த்தி வெளியூர் சென்றிருப்பதையும், வீட்டில் யாரும் இல்லை என்பதை நன்றாக தெரிந்த பின்புதான் இந்த செயலில் மர்ம ஆசாமிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே அவருக்கு நன்றாக தெரிந்த நபர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

எனவே சம்பவம் நடைபெற்ற சுற்று வட்டார பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. எனவே சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story