ஆரணியில், செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


ஆரணியில், செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Sept 2020 4:00 PM IST (Updated: 24 Sept 2020 3:46 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆரணி,

ஆரணி தாலுகா அலுவலகம் பின்பக்கம் கோட்டை தெருவில் ஒரு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு, அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார் செல்போன் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து, அனுமதி பெற்றுள்ளது. அந்த அனுமதியில் போலீஸ் பாதுகாப்புடன் டவர் அமைக்கும் பணி நடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதையொட்டி நேற்று காலை ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, விநாயகமூர்த்தி, ரேகாமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது.

அதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் எச்.ரவி, சாந்திவிநாயகம் ஆகியோர் தலைமையில் போலீசார் பொதுமக்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். செல்போன் டவர் அமைப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெற்று, பணி நடக்கிறது. நீங்கள் நீதிமன்றம் சென்று தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள், பணியை தடை செய்யாதீர்கள் எனக்கூறினர்.

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இனிவரும் காலங்களில் செல்போனின் அலைவரிசை அதிகமாகும்போது, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். புற்று நோய், கருத்தரிப்பு தடைபடும், சிறிய பறவை வகைகள் உயிர் வாழ இனி அச்சம் ஏற்படும், என்றனர். அப்போது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், செல்போன் டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது.

Next Story