தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புசட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திறந்துவைத்தார்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புசட்டம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க வேலூரில் சிறப்பு கோர்ட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சம்பந்தப்பட்ட வன்கொடுமை சார்ந்த வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் ஆற்காட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டு திறப்பு விழா நேற்று வேலூர் கோர்ட்டில் நடந்தது.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி தலைமை தாங்கி சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் சிறப்பு கோர்ட்டை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். இதில் வேலூர் மாவட்ட நீதிபதிகள் (பொறுப்பு) சத்தியநாராயணன், எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜெயச்சந்திரன், டீக்காராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் வேலூர் கோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டை வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி செல்வசுந்தரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட கோர்ட்டில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, கலெக்டர்கள் வேலூர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் சிவன்அருள், ராணிப்பேட்டை திவியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டுகள் வேலூர் செல்வகுமார், திருப்பத்தூர் விஜயக்குமார், ராணிப்பேட்டை மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணித்துறை வேலூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் அயிராதரசு ராஜசேகர், பார்அசோசியேசன் தலைவர் உலகநாதன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் தினகரன், பெண்கள் பார் அசோசியேசன் தலைவர் காஞ்சனா அறிவழகன், ஆற்காடு பார் அசோசியேசன் தலைவர் நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story