திருப்பத்தூரில், வெங்காய விலை கிடு கிடு உயர்வு - கிலோ ரூ.50-க்கு விற்பனை


திருப்பத்தூரில், வெங்காய விலை கிடு கிடு உயர்வு - கிலோ ரூ.50-க்கு விற்பனை
x
தினத்தந்தி 24 Sep 2020 12:30 PM GMT (Updated: 2020-09-24T17:48:09+05:30)

திருப்பத்தூர் மார்க்கெட்டில் வெங்காய விலை கிடு கிடு வென உயர்ந்தது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் விலை உயரக்கூடும், என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சக்திநகரில் காய்கறி மார்க்கெட் மற்றும் ஜின்னா ரோட்டில் வெங்காய மார்க்கெட் ஆகியவை உள்ளன. அங்கு தினமும் கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து 20 மேற்பட்ட லாரிகளில் வெங்காயம் பாரம் வருவது வழக்கம். கடந்தசில நாட்களாக கர்நாடகா, மும்பை பகுதியில் பெய்து வரும் மழையால் திருப்பத்தூர் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காயம் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் தர்மபுரி, திருச்சி ஆகிய பகுதியில் இருந்து லாரிகளில் தினமும் வந்து கொண்டிருந்தது. தற்போது தமிழகத்தில் பெய்யும் தொடர் மழையால் சின்னவெங்காயம் வரத்தும் தற்போது குறைந்தது.

இதுகுறித்து வெங்காய வியாபாரி ரமேஷ் கூறியதாவது:-

ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த மழையால் வெங்காய விளைச்சல் குறைந்தது. ஒரு நாளைக்கு 100 டன் வரை வெங்காயம் வரத்து வந்தது. தற்போது பாதியாக குறைந்தது. இதனால் விலை கிடு கிடுவென உயர்ந்தது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் 50 கிலோ மூட்டை ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த வெங்காயம் அதிகளவில் ஈரப்பதம் உள்ளதால் உடனடியாக அழுகி விடும். மராட்டியத்தில் இருந்து வரும் வெங்காயம் தரமாக உள்ளது. பொதுமக்கள் விரும்பி வாங்குவார்கள்.

தற்போது மராட்டியத்தில் வெங்காயம் 50 கிலோ மூட்டை ரூ.4 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் கிலோ ரூ.100 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தடை செய்யப்பட்டு இருந்தும் வெங்காய விலை குறையவில்லை. இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது. இதேபோல் சின்ன வெங்காயம் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

Next Story