காதில் பூ சுற்றி மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்


காதில் பூ சுற்றி மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
x
தினத்தந்தி 24 Sep 2020 1:15 PM GMT (Updated: 24 Sep 2020 1:11 PM GMT)

மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ சுற்றி மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான மீனவர்கள், மீனவ பெண்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு காதில் பூ சுற்றி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்டபம் மற்றும் ராமேசுவரம் பகுதி விசைப்படகுகள் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தனுஷ்கோடி முதல் எஸ்.பி.பட்டிணம் வரையிலான கடல்பகுதியில் விசைப்படகுகள் கரையோரங்களில் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், ராமேசுவரம் மண்டபம் பகுதிகளில் போலி ஆர்.சி. புத்தகங்கள் மூலம் அதிகரித்துவரும் விசைப்படகுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

முடிவில், மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டமாக சென்று மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story