திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நோயாளிகளிடம் குறை கேட்டார்
திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நோயாளிகளிடம் குறைகள் கேட்டார்.
சிவகாசி,
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நவீன வசதிகள் உள்ள ஆம்புலன்சுகளை வழங்கி உள்ளது.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்ட புதிய ஆம்புலன்சை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.
மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து டாக்டர் செண்பகதேவியிடம் கேட்டார். இந்த நிகழ்ச்சியின் போது சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன், தாசில்தார் வெங்கடேசன், அ.தி.மு.க. பிரமுகர்கள் அசன்பதுருதீன், பொன்சக்திவேல், வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், பலராமன், கருப்பசாமி, எஸ்.எஸ்.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 6 புதிய ஆம்புலன்சை தமிழக அரசு வழங்கி உள்ளது. கர்ப்பிணிகளின் வசதிக்காக, ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காந்தி சிலை அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், சுகாதார துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் விளக்கம் அளித்து விட்டார். எதிர்க் கட்சி தலைவர் என்பதால், ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டுகிறார். தனியார் மருத்துவமனைக்கு நிகராக போதுமான வசதிகள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தயாராக உள்ளது என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் நகர ஜெ.பேரவை செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வக்கீல் முருகேசன், ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் பாபுஜி, ஆர்.56 பால்பண்ணை கூட்டுறவு தலைவர் வனராஜ், பால்பண்ணை கூட்டுறவு துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், அவைத்தலைவர் பரமசிவம், நகர மாணவரணி செயலாளர் ராஜகோபால், மாவட்ட விவசாய அணி பிரிவு முத்துகிருஷ்ண ராஜா, மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம், கவுன்சிலர்கள் செல்வராஜ், லிங்கா முருகன், குருசாமி, நகர இளைஞரணி செயலாளர் ஞானவேல், அரசு வழக்கறிஞர் கனகராஜ், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜ், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்கு துரை, சேத்தூர் நடிகர் விஜயன், எஸ். ராமலிங்கபுரம் பரமசிவம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தேவதானம் சேகர், ஒன்றிய பாசறை இணைச்செயலாளர் அய்யனாபுரம் மாரீஸ்வரன், மகளிர் அணி, ராஜபாளையம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story