மதுரையில் கணவனால் தீ வைக்கப்பட்ட பெண் சாவு
மதுரையில் கணவனால் உயிரோடு எரிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
மதுரை,
மதுரை மதிச்சியம் ஆர்.ஆர்.மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹரிசுரேஷ் (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கும், கருப்பாயூரணி ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் கற்பகவள்ளிக்கும் (18) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முதலில் இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் மதிச்சியம் பகுதியில் தனியாக வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஹரிசுரேஷ் வேலைக்கு சரியாக செல்லவில்லை. ஆனால் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தவிர அவர் திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த பணத்தை எல்லாம் செலவு செய்தும், நகைகளை அடகு வைத்தும் குடும்பம் நடத்தி உள்ளார். மேலும் கூடுதல் வரதட்சணையாக நகை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் மது போதையில் அவர் மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து அவரை தாக்கினார். மேலும் ஆத்திரத்தில் ஹரிசுரேஷ் அருகில் இருந்த மண்எண்ணெயை எடுத்து கற்பகவள்ளி மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். உடல் வெந்த நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கற்பகவள்ளிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் மதிச்சியம் போலீசார் மனைவியை கொலை செய்ய முயன்றதாக ஹரிசுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கற்பகவள்ளி நேற்று பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story