ஆன்மிகத்தில் பற்றுள்ளவர்களையும், பண்பாளர்களையும் நியமிக்க வேண்டும்: கோவில்களை நிர்வகிக்க அரசியல்வாதிகள், அதிகாரிகளை நியமிப்பது உதவாது - அரசு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கோவில்களை நிர்வகிக்க அரசியல்வாதிகள், அதிகாரிகளை நியமிப்பது வளர்ச்சிக்கு உதவாது என்றும், ஆன்மிகவாதிகளையும், பண்பாளர்களையும் நியமிப்பதை பரிசீலிக்கும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில் வளாகம் மற்றும் அதன் சார்பு கோவில்களில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை, கோவில் செயல் அலுவலர் கடந்த மாதம் 20-ந்தேதி வெளியிட்டார். இந்த டெண்டர் அறிவிப்பில் உரிய விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை. தன்னார்வத்துடன் கோவில் பணிகளை செய்ய பக்தர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் தூய்மை பணிகளை செய்ய டெண்டர் விடப்பட்டு இருப்பதால் பக்தர்களின் உரிமை பறிக்கப்பட்டு உள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவிலில் நிரந்தர அறங்காவலர் குழுவை இதுவரை அமைக்கவில்லை. கோவில் செயல் அலுவலர்தான் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர் நிதி தொடர்பான விஷயத்தில் தடையிட முடியாது. அப்படி இருக்கும்போது, தூய்மை பணிகளுக்கான டெண்டரை கோவில் செயல் அலுவலர் அறிவித்தது, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில் அரசு சிறப்பு வக்கீல் கே.பி.நாராயணகுமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மனுதாரர் தனி நபர். அவருக்கும் கோவிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் இந்த வழக்கை தொடர தகுதியற்றவர். வேண்டுமானால் அவர் தனது கோரிக்கையை பொது நல வழக்காக தாக்கல் செய்யலாம். பழனி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே பக்தர்களை கொண்டு, கோவிலை தூய்மைப்படுத்துவது, சுகாதாரத்தை பேணுவது என்பது இயலாத காரியம். இவற்றை மேற்கொள்ள அதிக நபர்கள் தேவைப்படுகின்றனர். அன்னதானக்கூடம் போன்ற இடங்களில் தன்னார்வ பக்தர்கள் சேவை செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தூய்மை பணிகளுக்காக டெண்டர் விடுவது ஏற்கனவே வழக்கத்தில் இருந்து வருகிறது. கடைசியாக விடப்பட்ட டெண்டர், காலாவதியானதால் புதிதாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு அறங்காவலர் குழு இல்லை. தகுதியான நபர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த அறிவிப்பில் தவறு நடக்க வாய்ப்பில்லை” என கூறப்பட்டு இருந்தது.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
அப்பரின் உழவாரப்பணிகள் குறித்து பெரியபுராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். அந்த வகையில் பக்தர்களின் உழவாரப்பணிகள் போற்றப்படக்கூடியவை. மனுதாரர் பக்தர் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
டெண்டர் போன்ற நடவடிக்கைகளை தனிநபர் எடுக்க அறநிலையத்துறை விதிகளின்படி இயலாது. அந்த வகையில் பழனி கோவில் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே இந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பழனி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிர்வாகங்களை மேற்கொள்ள அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நியமிப்பது எந்த விதத்திலும் வளர்ச்சிக்கு உதவாது. ஆந்திர கோவில்களில் இருப்பது போல, தமிழகத்திலும் கோவில்களை நிர்வாகம் செய்வதற்கு ஆன்மிகத்தில் பற்றுள்ளவர்களையும், பண்பாளர்களையும் நியமிப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story