விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 24 Sep 2020 3:00 PM GMT (Updated: 24 Sep 2020 2:58 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

1.1.2021-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு 16.11.2020 முதல் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இதர பணி மேற்கொள்வதற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தால் பணி கால அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்படுகிறது. கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் தகுதியானவர்களிடம் 16.11.2020 முதல் 15.12.2020 வரை பெறப்படும். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் தலைமை தேர்தல் அலுவலரால் தனியாக தெரிவிக்கப்படும். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்களை முடிவு செய்யும் நாள் 05.01.2021 ஆகும். இறுதி வாக்காளர் பட்டியல் 20.1.2021 அன்று வெளியிடப்படும்.

ஏற்கனவே 14.2.2020 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தொடர் திருத்தப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே 1.1.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இதர பணிகளை தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் ( www.nvsp.in ) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளின்கீழ் 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் 16.11.2020 முதல் 15.12.2020 வரையிலான காலங்களில் அலுவலக வேலை நாட்களில் உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரால் பெறப்பட உள்ளது. இதுதவிர பொதுமக்கள், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

வாக்குச்சாவடிகளின் அமைவிடம் குறித்து ஏதேனும் ஆட்சேபனை மற்றும் வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட சப்-கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தாரிடம் கொடுக்கலாம். சிறப்பு சுருக்க திருத்தப்பணி சிறந்த முறையில் நடைபெறுவது தொடர்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியே ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்க ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை முகவர்களை உடன் நியமித்து அதன் விவரத்தினை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம். எனவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற அனைத்துக்கட்சியினர் தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார், காங்கிரஸ் வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story