திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை எரித்து வாலிபர்கள் போராட்டம்
திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை எரித்து வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் தினமும் குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கில் போடுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக சில வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருவிலேயே கொட்டி எரித்து வருகிறார்கள். இது குறித்து பேரூராட்சி அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் 3-வது வார்டில் உள்ள ஒரு தெருவில் நேற்று காலையில் குப்பைகள் போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வாலிபர்கள் ஒன்று திரண்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் எரியாத குப்பைகளை சேகரித்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு போட்டு தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே பேரூராட்சி அலுவலர்களும், போலீசாரும் வாலிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி அலுவலர்கள், தெருக்களில் குப்பைகளை தீயிட்டு எரிக்காமல், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை கிடங்கில் போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட வாலிபர்கள், தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story