குற்ற சம்பவங்களை தடுக்க கோவையில் 1,400 நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டம் - கமிஷனர் சுமித் சரண் தகவல்
கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.17 கோடியில் 1,400 நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமிஷனர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவை நகரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்போது போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசாரை அனுப்பி பிரச்சினை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதுதவிர முக்கியமான வழிபாட்டு தலங்கள், முக்கிய சந்திப்புகள், வர்த்தக நிறுவனங்கள் முன்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆசாமிகளின் உருவங்கள் பதிவாகி எளிதாக குற்றவாளிகள் பிடிபட வழிவகை ஏற்பட்டுள்ளது.
குற்றத்தை செய்துவிட்டு வாகனங்களில் தப்பிச்சென்றாலும் கேமராவில் பதிவாகும் பதிவு எண்களை வைத்தும் வாகனங்களை அறிந்து குற்றவாளிகளை கைது செய்வதிலும் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கை வகித்து வருகிறது.
இதுகுறித்து கோவை நகர போக்குவரத்து போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறியதாவது:-
கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை மற்றும் தனியார்கள் சார்பில் நகரம் முழுவதும் 21 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு நகரம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. முக்கிய போக்குவரத்து சிக்னல் உள்பட பல்வேறு இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுதவிர மேலும் 716 இடங்களில் 1,400 நவீன கேமராக்கள் ரூ.17 கோடி செலவில் பொருத்த அரசுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கியதும் பணிகள் நடைபெறும்.
மேலும் கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் நவீன வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிடவும், பதிவு செய்யவும் பெரிய அளவிலான வீடியோ திரைச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் கேமராக்கள் பொருத்தும்போது, கூடுதலாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வீடியோ திரைச்சுவர்களை அமைக்கவும், கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story