ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்: செல்போன் வாங்க மாணவருடன் சேர்ந்து உறவினர் கடத்தல் நாடகம் - வேட்டவலம் அருகே சம்பவம்


ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்: செல்போன் வாங்க மாணவருடன் சேர்ந்து உறவினர் கடத்தல் நாடகம் - வேட்டவலம் அருகே சம்பவம்
x
தினத்தந்தி 25 Sept 2020 4:00 AM IST (Updated: 25 Sept 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு வாட்ஸ்-அப்பில் கடத்தல் நாடகம் ஆடி கொலை மிரட்டல் விடுத்த பிளஸ்-2 மாணவரும் அவரது உறவினரும் சிக்கினர்.

வேட்டவலம், 

வேட்டவலம் அருகே உள்ள கல்லாயி சொரத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அந்த வாலிபரின் செல்போனில் இருந்து அவரது உறவினருக்கு ‘வாட்ஸ் அப்’பில் ஒரு புகைப்படம் வந்தது. அதில், வாலிபரின் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் வாயையும் துணியால் கட்டியபடி தரையில் கிடந்த நிலையில் இருந்தது. மேலும் குறுஞ்செய்தியில் (எஸ்.எம்.எஸ்.) அவரை கடத்தியுள்ளோம், ரூ.5 லட்சம் கொடுத்தால் ஒப்படைப்போம் இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர், அந்த வாலிபரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து வேட்டவலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி விசாரணை நடத்தினார். மேலும் வாலிபரின் செல்போனை நம்பரை வைத்து தேடிய போது சொரத்தூர் மலையடிவாரத்தில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வாலிபர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பினார்.

அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, வேட்டவலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், புதிய செல்போன் வாங்குவதற்காக தனது உறவினருடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. வாலிபரை காணவில்லை என அவனது பெற்றோர் தேடிய போது உறவினரும் சேர்ந்து தேடுவதை போல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story