இதுவரை இல்லாத அளவாக தமிழகத்துக்கு 820 கனஅடி கிருஷ்ணா நதி நீர் வரத்து
தமிழகத்துக்கு இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 820 கனஅடி கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கியமான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
இந்த நிலையில் பூண்டி ஏரி வறண்டதால் சென்னை மக்களீன் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என்று திருப்பதியில் சில நாட்களுக்கு முன் நடந்த இரு மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அதன் பேரில் கடந்த 18-ந் தேதி காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த 20-ந் தேதி இரவு வந்தடைந்தது. 21-ந் தேதி காலை பூண்டி ஏரியை சென்றடைந்தது. ஜீரோ பாயிண்டிற்கு முதலில் வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று வினாடிக்கு 820 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு அதிக அளவாகும். கிருஷ்ணா நதி நீர் பங்கிடு திட்டத்தின்கீழ் 1996-ம் ஆண்டு முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீீர் வந்து கொண்டிருக்கிறது.
2019-ம் ஆண்டு 801 அடியாக தண்ணீர் வந்ததுதான் இது வரை அதிக அளவாக இருந்தது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் போதெல்லாம் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நதி கால்வாய் நெடுகில் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே உள்ள மதகுகளை திறந்து விவசாயத்துக்கு தண்ணீீர் எடுத்து கொள்வது வழக்கம். ஆனால் தற்போது சென்னை நகர மக்களுக்கு குடிநீர் தேவை உள்ளதை கருத்தில் கொண்டு ஆந்திர விவசாயிகள் மதகுகளை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சாதனை அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணியவில் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 20.28 அடியாக பதிவானது. 277 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. தண்ணீர் வரத்து இதே நிலையில் நீடித்தால் இன்னும் சில நாட்களில் பூண்டி ஏரியின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story