வர்த்தகர்களின் வசதிக்காக ரெயில்வே பார்சல் சேவையிலும் முன்பதிவு


வர்த்தகர்களின் வசதிக்காக ரெயில்வே பார்சல் சேவையிலும் முன்பதிவு
x
தினத்தந்தி 25 Sept 2020 4:30 AM IST (Updated: 25 Sept 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

வர்த்தகர்களின் வசதிக்காக ரெயில்வே பார்சல் சேவையிலும் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ரெயில் பயணச்சீட்டு முன் பதிவு செய்வதை போல வர்த்தக சங்கங்களின் வேண்டுகோளின்படி, ரெயில்வே பார்சல் சேவையிலும் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது தெற்கு ரெயில்வே. பயணிகள் ரெயில்களில் இயக்கப்படும் பார்சல் வேன்களில் வர்த்தகர்கள் தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் எடைக்கு ஏற்ப இடத்தை 120-வது நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வர்த்தகர்கள் தங்களது சரக்குகளை அனுப்புவதை திட்டமிட்டு கொள்வதோடு, ரெயிலில் அனுப்புவதையும் உறுதி செய்து கொள்ளலாம்.

8 மெட்ரிக் டன் மற்றும் 23, 24 டன் பார்சல் வேன்களில் 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்வது, குறிப்பிட்ட பயணிகள் ரெயில் அல்லது கால அட்டவணையில் இயக்கப்படும் பார்சல் ரெயில்கள் ஆகியவற்றில் சரக்குகளை அனுப்புவது ஆகியவை இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். ஏற்கனவே ஒப்பந்த குத்தகை அடிப்படையில் உள்ள பார்சல் வேன்களுக்கு முன்பதிவு செய்ய முடியாது. முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு ஒப்பந்த குத்தகை முறைக்கு உள்ள பெயர் பதிவு அவசியமில்லை.

முன்பதிவு செய்ய விரும்புவோர் 10 சதவீத பார்சல் கட்டணத்தை முன்பே செலுத்த வேண்டும். மீதமுள்ள 90 சதவீத கட்டணத்தை ரெயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக செலுத்த வேண்டும். முன்பதிவை ரெயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் 50 சதவீத முன் வைப்பு கட்டணம் திருப்பித்தரப்படும். தவறினால் முழு முன்வைப்பு கட்டணமும் காலாவதியாகிவிடும்.

தற்போது பார்சல் வேன்கள் பதிவு செய்யப்பட்ட குத்தகைதாரர்களுக்கு ஒப்பந்த குத்தகையாக 5 ஆண்டுகளுக்கு விடப்படுகிறது. மேலும் பதிவுபெற்ற குத்தகைதாரர்கள் 8 மெட்ரிக் டன் அளவுள்ள பார்சல் வேன்களை 30 நாட்களுக்கு தற்காலிக குத்தகைக்கும் எடுத்து கொள்ளலாம். எனவே பார்சல் வேன்கள் முன்பதிவு செய்ய விரும்புவோர் தங்களுக்கு அருகிலுள்ள ரெயில் நிலையம் பார்சல் பிரிவு மேற்பார்வையாளரையோ அல்லது ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள வர்த்தக பிரிவையோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story