நடைபயிற்சி சென்ற போது கார் மோதி வாலிபர் பலி; அதிர்ச்சியில் தந்தை சாவு - திருபுவனை அருகே சோகம்


நடைபயிற்சி சென்ற போது கார் மோதி வாலிபர் பலி; அதிர்ச்சியில் தந்தை சாவு - திருபுவனை அருகே சோகம்
x
தினத்தந்தி 25 Sept 2020 4:27 AM IST (Updated: 25 Sept 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை அருகே நடைபயிற்சிக்கு சென்ற வாலிபர் கார் மோதி உயிரிழந்தார். இதைக் கேட்ட அவரது தந்தை அதிர்ச்சியில் இறந்துபோனார்.

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 56). கிராம நிர்வாக அலுவலர். இவரது மகன் உத்திரகுமார் (35). கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவருக்கு முத்தமிழ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

உத்திரகுமார் தினமும் காலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பி.ஆர்.டி.சி. டிரைவர் அழகுநாதன் (53), கார் டிரைவர் பரசுராமன் (34) ஆகியோருடன் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை 5 மணியளவில் 3 பேரும் நடைபயிற்சிக்கு சென்றனர்.

திருபுவனை பகுதியில் இருந்து தமிழக பகுதியான கண்டமங்கலம் அருகே பள்ளிநேலியனூருக்கு ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி திருபுவனை- மண்டகப்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக 3 பேர் மீதும் மோதியது. இதில் உத்திரகுமார் தூக்கி வீசப்பட்டார். அவருடன் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த அழகுநாதன், பரசுராமன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், உத்திரகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து சம்பவம் குறித்து 3 பேரின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உத்திரகுமாரின் தந்தை விநாயகம் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மகன் உத்திரகுமாரின் உடலை பார்த்து விநாயகம் கதறி அழுதார். அப்போது அதிர்ச்சியில் அவர் நெஞ்சை பிடித்தபடி அங்கேயே சரிந்து விழுந்தார்.

அங்கிருந்த டாக்டர்கள் விநாயகத்தை பரிசோதித்துப் பார்த்த போது அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. கார் மோதி மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையின் இறந்த செய்தி அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த விபத்து குறித்து கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். உத்திரகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விநாயகம் இறந்தது குறித்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் (பொறுப்பு) ஆகியோர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை உயிரிழந்த சம்பவம் திருபுவனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story