கரூர் அருகே விபத்து: அறிவிப்பு பலகை தூண் மீது கார் மோதி புதுமண தம்பதி பலி


கரூர் அருகே விபத்து: அறிவிப்பு பலகை தூண் மீது கார் மோதி புதுமண தம்பதி பலி
x
தினத்தந்தி 25 Sept 2020 7:36 AM IST (Updated: 25 Sept 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே சாலையோர அறிவிப்பு பலகை தூண் மீது கார் மோதி புதுமண தம்பதி பலியானார்கள்.

நொய்யல்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சந்தோஷ் (வயது 26). இவர் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பாலமேட்டில் பேக்கரி நடத்தி வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி (20). இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆகிறது.

இந்நிலையில் சந்தோசும்-மகாலட்சுமியும் நேற்று முன்தினம் இரவு பாலமேட்டில் உள்ள பேக்கரியில் இருந்து தங்களது காரில் சொந்த ஊரான வீரமலைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை சந்தோஷ் ஓட்டினார். கார் நேற்று அதிகாலை 2 மணியளவில் கரூர் மாவட்டம், தளவாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த அறிவிப்பு பலகை தூண் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் காரின் முன்பக்கம் சுக்குநூறாக நொறுங்கியது.

தம்பதி பலி

காரின் இடிபாடுகளில் சிக்கிய தம்பதி படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து, உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சந்தோஷ், மகாலட்சுமி ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

உறவினர்கள் கதறல்

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷ் காரை ஓட்டும்போது தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம், அதனால் விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என போலீசார் கருதுகிறார்கள்.

தம்பதி இறந்த தகவல் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மாலையில் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆன புதுமண தம்பதி, விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் இடையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story