ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்பு


ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 2:14 AM GMT (Updated: 2020-09-25T07:44:47+05:30)

ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகில் உள்ள புதர் பகுதி ஒன்றில் பை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அந்த பையில் இருந்து குழந்தை அழும் சத்தமும் கேட்டது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதை கேட்டு, ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து, அந்த பையை சோதனையிட்டனர்.

அப்போது பைக்குள் வெள்ளை துணியை மூட்டைபோல கட்டி, அதனுள் குழந்தை வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் தொப்புள் கொடிகூட வெட்டப்படாத நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இருந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குழந்தை உயிருடன் இருந்ததால் உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

கள்ளக்காதல் காரணமாகவோ அல்லது காதலன் விட்டு சென்றதால் கர்ப்பமாகி குழந்தை பெற்றதன் காரணமாக பெற்ற குழந்தையை அப்பெண் கொல்ல மனமின்றி, துணிமூட்டையில் பாதுகாப்பாக வைத்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பெண் யாருக்காவது குழந்தை பிறந்து வெளியேறி இருக்கிறார்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story