திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தர்ணா


திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தர்ணா
x
தினத்தந்தி 25 Sep 2020 3:52 AM GMT (Updated: 25 Sep 2020 3:52 AM GMT)

திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எலச்சிப்பாளையம்,

திருச்செங்கோடு நெட்டவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை அவரது உறவினர் பழனிசாமி என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை பழனிசாமி தன் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாகவும் தெரிகிறது.

ஆக்கிரமிப்பு செய்து, போலியாக பத்திரபதிவு செய்த தனது நிலத்தை மீட்டு தரக்கோரி தனசேகரன் திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தார். மேலும் மாவட்ட பதிவாளருக்கும் இணையதளம் வழியாக புகார் அனுப்பி இருந்தார். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில் தனசேகரன் நேற்று திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது மனைவி கோகிலா, 2 மகள்கள் மற்றும் நிலத்தின் மற்றொரு பங்குதாரர் பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகையை கையில் பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் பத்திர பதிவுத்துறை துணை தலைவர் ஆனந்த், நாமக்கல் மாவட்ட பதிவாளர் ரவி ஆகியோர் தனசேகரனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் தனசேகரன் தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story