கொடைக்கானலில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்


கொடைக்கானலில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2020 10:59 AM IST (Updated: 25 Sept 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் நடந்தது. மேலும் விஷம் குடிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் நகராட்சி ஆனந்தகிரி 5-வது தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வானொலி நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள 1¼ ஏக்கர் நிலத்துக்கு செந்தில் சேர்வை என்பவர் பட்டா பெற்றுள்ளார். இது தொடர்பாக நகராட்சி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அந்த நிலத்தை காலி செய்யக்கோரி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நகராட்சி ஆணையர் நாராயணன், நகரமைப்பு அலுவலர் அப்துல் நாசர், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதற்கு செந்தில்சேர்வை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி

பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிற அந்த நிலத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பேரிக்காய் சாகுபடியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக அறிவிப்பு செய்த பிறகே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதற்கிடையே விவசாய பயிர்களுக்கு தெளிப்பதற்காக வாளியில் பூச்சி மருந்து (விஷம்) வைக்கப்பட்டிருந்தது. அதனை பெண்கள் சிலர் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனைக்கண்ட போலீசார், அவர்களிடம் இருந்து பூச்சி மருந்தை பிடுங்கினர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதனையடுத்து ஆணையர் நாராயணன், செந்தில்சேர்வை குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோர்ட்டு உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அந்த நிலத்தில் பயிரிட்டிருந்த உருளைக்கிழங்கு, கேரட் பயிர்கள் அழிக்கப்பட்டன. பேரிக்காய் மரங்கள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என்று நகராட்சி நகரமைப்பு துறையினர் கூறினர்.

Next Story