கோடநாடு வழக்கில், கைதானவர்களை கோர்ட்டுக்கு அழைத்து வந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி


கோடநாடு வழக்கில், கைதானவர்களை கோர்ட்டுக்கு அழைத்து வந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 25 Sept 2020 3:30 PM IST (Updated: 25 Sept 2020 3:26 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு வழக்கில் கைதானவர்களை ஊட்டி கோர்ட்டுக்கு அழைத்து வந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கில் தொடர்புடைய சயான், மனோஜ் உள்பட 6 பேர் கோவை மற்றும் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மற்ற 4 பேர் ஜாமீனில் உள்ளனர். சிறையில் உள்ளவர்களை வழக்கின் விசாரணையின் போது போலீசார் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக சயான், மனோஜ் உள்பட 6 பேரை ஊட்டி ஆயுதப்படை போலீசார் போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கொரோனா பாதித்த சப்-இன்ஸ்பெக்டருடன் தொடர்பில் இருந்த போலீசார் உள்பட 20 பேரிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட சயான், மனோஜ் உள்ளிட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது வக்கீல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story