மதுக்கரை அருகே பரபரப்பு: கேரள மணல் லாரிகளை சிறைபிடித்த பா.ஜ.க.வினர்


மதுக்கரை அருகே பரபரப்பு: கேரள மணல் லாரிகளை சிறைபிடித்த பா.ஜ.க.வினர்
x
தினத்தந்தி 25 Sept 2020 4:15 PM IST (Updated: 25 Sept 2020 4:16 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கரை அருகே கேரள மணல் லாரிகளை பா.ஜ.க.வினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போத்தனூர்,

கோவை மதுக்கரை அருகே பாலத்துறை, திருமலையாம்பாளையம் வழியாக கேரளாவுக்கு எம்.சாண்ட் மற்றும் கருங்கல் லோடுகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகள் செல்லும் சாலை குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். லாரிகள் வேகமாக செல்வதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த பகுதி வழியாக லாரிகள் செல்லக்கூடாது என அந்த பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் லாரிகள் தொடர்ந்து சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று திருமலையாம்பாளையம் சாலை வழியாக கேரளாவுக்கு எம்.சாண்ட் மணல் லோடு ஏற்றி சென்ற லாரிகளை பா.ஜ.க.வினர் சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். மேலும் திருமலையாம்பாளையம் ஊருக்குள் வந்த லாரிகளை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரிகள் மணல் லோடுகளை ஏற்றி கொண்டு உள்ளூர் சாலைகளை கடந்து வேலந்தாவளம் சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு செல்கின்றன. குறிப்பாக திருமலையாம்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் அதிவேகமாக லாரிகள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது என்று தெரிவித்தனர்.

லாரிகள் சிறைபிடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் க.க.சாவடி போலீசார் விரைந்து வந்து, பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வழியாக லாரிகள் வருவதை தடுப்பதாகவும், அத்துமீறி வரும் லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர்.

Next Story