கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி பறிமுதல்


கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Sept 2020 6:15 PM IST (Updated: 25 Sept 2020 7:12 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கிசான் நிதிஉதவி திட்ட முறைகேடு தொடர்பாக விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து மேலும் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ந்தேதி வரை பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 80 ஆயிரத்து 737 பேர் சேர்ந்துள்ளனர். இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பலர் சேர்ந்து, நிதிஉதவி பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கிசான் நிதிஉதவி திட்டத்தில் சேர்ந்த பயனாளிகள் பட்டியலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மாவட்டத்தில் 70,709 பேர் விவசாயிகள் என்ற போர்வையில் போலியாக விண்ணப்பித்து, இத்திட்டத்தில் சேர்ந்து நிதிஉதவி பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவின் பேரில் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் விவசாய திட்டத்தில் வேலை செய்ய தகுதி இல்லாத 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் வேளாண்மை அதிகாரி, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இதுவரை முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள 226 வங்கி கிளைகளில் இருந்து 162 வேளாண் களப்பணியாளர்கள் மூலமாக கடந்த 3 நாட்களில் மட்டும் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து மேலும் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் காவல்துறையை சேர்ந்த களப்பணியாளர்களை கொண்ட 170 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story