திருப்பூர் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை கடும் சரிவு - கிலோ ரூ.160-க்கு விற்பனை


திருப்பூர் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை கடும் சரிவு - கிலோ ரூ.160-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 Sept 2020 8:15 PM IST (Updated: 25 Sept 2020 8:05 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.160-க்கு விற்பனையானது.

திருப்பூர்,

திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பூக்களின் விலை அதிகமாக இருந்தது. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் சுபமுகூர்த்த தினங்கள் இல்லாத காரணத்தால் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

தற்போது முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தாலும், பூக்களின் வரத்து சற்று அதிகரித்துள்ளதாலும் விலை குறைந்துள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூ கடந்த வாரம் கிலோ ரூ.500 வரைக்கும் விற்பனையான நிலையில் தற்போது ரூ.120 முதல் அதிகபட்சமாக 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் ரூ.240-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ தற்போது ரூ.80 முதல் ரூ.120 வரைக்கும் விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.200 வரைக்கும் விற்கப்பட்ட சம்பங்கி பூ ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும் விற்கப்படுகிறது.

இதேபோல் அரளிப்பூ கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும, பட்டுப்பூ கிலோ ரூ.60 முதல் ரூ.100, செவ்வந்திப்பூ ரூ.80 முதல் ரூ.100, ஜாதிமுல்லை ரூ.160 முதல் ரூ.140, ரோஜா பூ ரூ.80 முதல் ரூ. 120 வரைக்கும் விற்கப்படுகின்றது. கடந்த ஒரு வாரமாக பூக்களின் விலை குறைவாக உள்ள நிலையில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால் பூக்களின் விலை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இன்னும் சில தினங்களில் ஆயுத பூஜைக்கான சீசன் தொடங்க இருப்பதால் பூக்களின் விலை அதிகமாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது பூக்களின் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

Next Story