மானாமதுரை அரசு மருத்துவமனையில் பார்வையாளர் கட்டிடத்தை திறப்பது எப்போது?
மானாமதுரை அரசு மருத்துவமனையில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பார்வையாளர்கள் கட்டிடத்தை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மானாமதுரை,
மானாமதுரை பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மானாமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் அவசர கால மருத்துவ சிகிச்சைக்கும், விபத்து உள்ளிட்ட சிகிச்சைகளுக்கும் முதலுதவி பெறுவதற்காக தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் மானாமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.
இதேபோல் உள்நோயாளிகளாக 50-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இந்த மருத்துவமனை அருகே கடந்த 2018-19-ம் நிதியாண்டின் கீழ் தேசிய வாழ்வாதார திட்டத்தில் இந்த மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட வரும் அவர்களின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்குவதற்காக ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் கட்டிடத்தில் சில குடிமகன்கள் அமர்ந்து மது குடிக்கும் பாராக மாறி விட்டது.
திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ள இந்த புதிய கட்டிடம் குறித்து தலைமை மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கட்டி முடிக்கப்பட்ட பார்வையாளர் கட்டிடத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story