சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2020 3:45 AM IST (Updated: 25 Sept 2020 11:21 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 22 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட தூரச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச்சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருக்கும் இடத்துக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். காலி இடம் உள்ள பள்ளி, பள்ளிகளுக்கான இனசுழற்சி விவரம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டு இருக்கும்.

விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களை தொடர்பு கொள்ளவும். விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பின் தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். அழைப்பாணையில் தெரிவிக்கப்படும் தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நேர்முக தேர்வுக்கு மனுதாரர் அசல் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story