சாயர்புரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கைது


சாயர்புரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2020 3:00 AM IST (Updated: 25 Sept 2020 11:21 PM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

சாயர்புரம்,

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பகுதிக்கு ஒரு ஆட்டோவில் 6 பேர் வந்தனர். அவர்கள் திடீரென மறைத்து வைத்து இருந்த ஆயுதங்களை காண்பித்து, அங்கு கடையில் இருந்தவர்களிடம் மாமூல் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகபெருமாள், அருள்சாம்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் போலீசாரை தாக்க முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் 6 பேரையும் லாவகமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 6 பேரும் பிரபல ரவுடிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் நெல்லை தச்சநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32), சேரன்மாதேவி மேலக்கூனியூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கச்செல்வன் (26), முறப்பநாடு பக்கப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி (23), நெல்லை தாழையூத்து கட்டுடையார் குடியிருப்பு நியூகாலனியைச் சேர்ந்த மகாராஜன் (31), பாளையங்கோட்டை வள்ளக்கோவில் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகராஜன் (23), நெல்லை மேலபுத்தனேரி காந்திநகரைச் சேர்ந்த ராசுக்குட்டி (19) என்பது தெரியவந்தது.

இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரை கொலை செய்ய வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது 20 வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். சின்னத்தம்பி மீது 5 வழக்குகளும், ராசுக்குட்டி மீது 2 கொலை வழக்குகளும் உள்ளன. மற்றவர்கள் இவர்களின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவர். இவர்களை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story