காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ரூ.400 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு - கலெக்டர் எஸ்.சிவராசு தகவல்


காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ரூ.400 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு - கலெக்டர் எஸ்.சிவராசு தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2020 3:30 AM IST (Updated: 26 Sept 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

ரூ.400 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.

திருச்சி, 

ஊரடங்கு உத்தரவின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொலி மையங்களில் அமர்ந்து தங்களது குறைகளை எடுத்துக் கூறினார்கள். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

2020-2021-ம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை பெறப்பட்டு உள்ளது. கரும்பு பயிருக்கு பிரீமிய தொகை ரூ.2,650 செலுத்த அடுத்த மாதம்(அக்டோபர்) 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு பதிவு செய்யவும், கடன் பெறா விவசாயிகள் மாவட்டத்திலுள்ள அரசு பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ காப்பீடு செய்துகொள்ளலாம்.

திருச்சி மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டு ரூ.396 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் 37,790 விவசாயிகளுக்கு ரூ.282 கோடி பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் இதுவரை 13,111 விவசாயிகளுக்கு ரூ.102 கோடி பயிர் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

2020-2021-ம் ஆண்டில் தட்கல் திட்டத்தில் 814 மின் இணைப்பு வழங்க இலக்கீடு பெறப்பட்டு உள்ளது. 2019-20-ம் ஆண்டிற்கு குடிமராமத்து திட்டத்தின் மூலமாக 35 பணிகள் ரூ.9 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்ய தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஆலங்குடி மகாஜனம், சிறுமயங்குடி, ராமநாதபுரம், அரியூர், திருமணமேடு, கோமாக்குடி, வாளாடி, பி.மேட்டூர் ஆகிய 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 43 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

2019-20-ம் ஆண்டு சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,905 மற்றும் பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,865 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியகருப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தி, தோட்டக்கலை துணை இயக்குனர் விமலா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story