புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம் + "||" + Demand repeal of new agricultural law With skulls in Trichy Farmers' Innovation Struggle
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராகவும், அந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நூதன போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.
இதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் மனித மண்டை ஓடுகளை கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார். இன்னொரு விவசாயி கோவணம் கட்டி இருந்தார். சமூக இடைவெளியை பின்பற்றி தரையில் அமர்ந்திருந்த விவசாயிகள் தங்களது கைகள் மற்றும் உடலை இரும்பு சங்கிலியால் இறுகக்கட்டி இருந்தனர்.
இன்னும் சில விவசாயிகள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியபடியும், அதை 2 பேர் இழுத்து பிடித்தபடியும் நின்று கொண்டிருந்தனர். புதிய வேளாண் சட்டம் அமலுக்கு வந்தால் விவசாயிகள் கார்பரேட் நிறுவன முதலாளிகளின் கையில் சிக்கி அடிமைகள் போல் இரும்பு சங்கிலியால் கட்டப்படுவார்கள் என்றும், வாழ்வாதாரம் இழந்து விவசாயிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை விளக்குவதற்காக இந்த போராட்டத்தை நடத்துவதாக பங்கேற்ற விவசாயிகள் கூறினார்கள்.
போராட்ட முடிவில் அய்யாகண்ணு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து எழுதப்பட்டிருந்த அந்த மனுவில் கரும்பு ஆலைகள் விவசாயிகளிடமிருந்து பெற்ற கரும்புக்கு 5 வருடம் வரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு வரவேண்டிய பணம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த பணத்தை விவசாயிகளுக்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.