பர்கூர் தொகுதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா - சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி


பர்கூர் தொகுதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா - சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 26 Sept 2020 3:45 AM IST (Updated: 26 Sept 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சி.வி.ராஜேந்திரன். இவரது சொந்த ஊர் பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி ஆகும். கட்சி கூட்டங்களிலும், பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் வந்தது.

இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரி சட்டசபை உறுப்பினர் டி.செங்குட்டுவன் (தி.மு.க.) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் (காங்கிரஸ்) கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story