விழுப்புரம் அருகே பரபரப்பு: அறியாத வயதில் வந்த ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம் வீடு புகுந்து பள்ளி மாணவி குத்திக் கொலை - மாற்றுத்திறனாளி சிறுவன் வெறிச்செயல்


விழுப்புரம் அருகே பரபரப்பு: அறியாத வயதில் வந்த ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம் வீடு புகுந்து பள்ளி மாணவி குத்திக் கொலை - மாற்றுத்திறனாளி சிறுவன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 26 Sept 2020 3:30 AM IST (Updated: 26 Sept 2020 10:05 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே வீடுபுகுந்து பள்ளி மாணவியை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த மாற்றுத்திறனாளி சிறுவன் கைது செய்யப்பட்டான். அறியாத வயதில் வந்த ஒருதலை காதலால் நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 7-ம் வகுப்பு படித்து முடித்திருந்தார். இவருடைய தந்தை நேற்று காலை வழக்கம்போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டார். தாய், நூறுநாள் வேலைக்கு சென்றிருந்தார். மாணவியின் தம்பியும், தங்கையும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மாலை 3 மணியளவில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேட்காத 16 வயதுடைய சிறுவன், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தான்.

பின்னர் அந்த சிறுவன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். உடனே மாணவி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சல் போட்டாள். இதனால் சிறுவன், மாணவியின் வாயை துணியால் பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். இருப்பினும் மாணவி, அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் மாணவியின் வயிறு, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினான்.

இதில் ரத்தம் சொட்ட, சொட்ட மாணவி அந்த இடத்திலேயே உயிரிழந்தாள். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். அப்போது அந்த சிறுவன் ரத்தக்கறை படிந்த கத்திரிக்கோலுடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். பொதுமக்களை பார்த்ததும், சிறுவன் தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

இதனிடையே வேலைக்கு சென்றிருந்த மாணவியின் பெற்றோர், நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பதறியடித்துக்கொண்டு வந்தனர். அவர்கள், தங்கள் மகளின் உடலை கட்டியணைத்து கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிடிபட்ட சிறுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதும், இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள், அந்த சிறுவனை கண்டித்ததோடு அவனது பெற்றோரிடமும் இதுபற்றி கூறி எச்சரிக்கை செய்தனர்.

இந்த சூழலில் நேற்று மாணவி மட்டும் அவளது வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சிறுவன், அத்துமீறி அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். உடனே மாணவி கூச்சல் போடவே ஆத்திரமடைந்து கத்தரிக்கோலால் சரமாரியாக குத்திக்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மாற்றுத்திறனாளி சிறுவனை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த மாணவியை மாற்றுத்திறனாளி சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story