பேரணாம்பட்டு அருகே ஒற்றை காட்டு யானை விடிய விடிய அட்டகாசம் - வேளாண் விளை பயிரை துவம்சம் செய்தது


பேரணாம்பட்டு அருகே ஒற்றை காட்டு யானை விடிய விடிய அட்டகாசம் -  வேளாண் விளை பயிரை துவம்சம் செய்தது
x
தினத்தந்தி 26 Sept 2020 10:45 AM IST (Updated: 26 Sept 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே ஒன்றை காட்டு யானை விடிய விடிய அட்டகாசத்தில் ஈடுபட்டது. அங்குள்ள வேளாண் விளை பயிரை துவம்சம் செய்தது.

பேரணாம்பட்டு,

நாட்டறம்பள்ளி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள பருத்திக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரின் நிலத்தில் மனைவி, மகள் சோனியா (வயது 17) ஆகிய இருவரும் தங்கி காவலுக்கு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒற்றை ஆண் காட்டு யானை முருகனின் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தியது. அங்கு தூங்கி கொண்டிருந்த மகள் சோனியா திடுக்கிட்டு எழுந்து வெளியில் வந்து பார்த்தபோது, ஒற்றை யானை தும்பிக்கையால் சோனியாவை தூக்கி வீசி காலால் மிதித்துக் கொன்றது.

அட்டகாசத்தில் ஈடுபட்ட ஒற்றை ஆண் காட்டு யானை ஆந்திர வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள தமிழக எல்லையான பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் உள்ள பத்தலப்பல்லி அணைப்பகுதி ஆத்துப்பாய் என்ற இடத்துக்கு நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் வந்து பிளிறியவாறு, தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் பாணம், பட்டாசு, வெடி வைத்து யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். அங்கிருந்து திரும்பி சென்று சிறிது தூரத்தில் உள்ள பத்தலப்பல்லி கொல்லைமேடு பகுதியில் விவசாயி கோவிந்தன் (45), அவரின் அண்ணன் அசோகன் (48) ஆகியோரின் நிலத்தில் அறுடை செய்த நெல்லை வேக வைத்து விட்டு அருகில் உள்ள குடிசை வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தனர்.

நெல்லை வேக வைக்கும்போது, அதில் இருந்து வெளியேறும் வாசனையை மோப்பம் பிடித்த ஒற்றை யானை, அவர்களின் நிலத்துக்குள் புகுந்ததைப் பார்த்து விட்டு அங்கிருந்த விவசாயிகள் கூச்சலிட்டனர். தூங்கி கொண்டிந்த கோவிந்தன், அசோகன் ஆகியோர் திடுக்கிட்டு எழுந்து குடும்பத்துடன் குடிசை வீட்டில் இருந்து தப்பியோடி 50 அடி தூரத்தில் மறைவான ஒரு பகுதியில் நின்று கொண்டு தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

அந்த ஒற்றை யானை கோவிந்தன், அசோகன் ஆகியோரின் குடிசை வீட்டை தும்பிக்கையால் சாய்த்து, அங்கிருந்த 4 மூட்டை நெல், 2 மூட்டை வேர்க்கடலை, தீவன மாவு, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டு நாசம் செய்தது. கோவிந்தன் நிலத்தில் இருந்த 3 வாழை மரங்களை சேதப்படுத்தியது.

அங்குள்ள சேட்டுவின் நிலத்தில் புகுந்த ஒன்றை யானை அரை ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர், தீவன பயிர் மற்றும் கர்ணனின் நிலத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரை துவம்சம் செய்து நள்ளிரவு 12.15 மணியில் இருந்து அதிகாலை 3.00 மணி வரை 3 மணி நேரம் விடிய விடிய பிளிறியபடி தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் உதவியோடு பாணம், பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து பேரணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா கூறுகையில், வனப்பகுதியையொட்டி உள்ள நிலங்களில் இரவில் விவசாயிகள் தங்க வேண்டாம். நெல்லை வேக வைக்கும்போது, அதன் வாசனையை ஒற்றை யானை மோப்பம் பிடித்து சம்பவ இடத்துக்கு வரும். எனவே அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் நிலத்தில் வைக்க வேண்டாம். விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story