வேளாண் மசோதாக்களை கண்டித்து குன்னூர், பந்தலூரில் விவசாயிகள் சாலை மறியல்; 45 பேர் கைது


வேளாண் மசோதாக்களை கண்டித்து குன்னூர், பந்தலூரில் விவசாயிகள் சாலை மறியல்; 45 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2020 11:00 AM IST (Updated: 26 Sept 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து குன்னூர், பந்தலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி, 

நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக குன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விவ சாயிகள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் 3 மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்று கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட மாநில குழு உறுப்பினர் பத்ரி உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று கோத்தகிரி, கூடலூரில் போராட்டம் நடந்தது.

இதுபோல் பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் வேளாண் மசோதாவின் நகல்களை எரித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் யோகண்ணன் தலைமையில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜன் உள்பட 21 பேரை சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு மற்றும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகி வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story