பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு


பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Sep 2020 6:45 AM GMT (Updated: 26 Sep 2020 6:39 AM GMT)

பூங்காவில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியால் ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழி,

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆரல்வாய்மொழியில் மீன் சந்தையோடு செயல்பட்டு வந்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. அதாவது, சந்திப்பில் உள்ள பூங்காவில் கடந்த 5 மாதமாக செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், வேன்கள் சாலையோரத்துக்கு மாற்றப்பட்டது.

தற்போது அரசு படிப்படியாக தளர்வு அறிவித்ததை தொடர்ந்து, பல்வேறு சந்தைகள் பழைய இடங்களுக்கே மாற்றப்பட்டன. ஆனால் ஆரல்வாய்மொழி காய்கறி சந்தை பழைய இடத்திற்கு மாற்றப்படாமல் தொடர்ந்து தற்காலிக இடத்திலேயே இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று ஆட்டோ டிரைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆட்டோக்களை பூங்காவிற்குள் கொண்டு சென்று வரிசையாக நிறுத்தினார்கள்.

இதை பார்த்த காய்கறி வியாபாரிகள், ஆட்டோக்களை வெளியே கொண்டு செல்லுமாறு கூறினர். இதனால் பூங்காவில் இடம் பிடிப்பது தொடர்பாக வியாபாரிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ் பாபு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆட்டோவை வெளியே எடுக்க டிரைவர்கள் மறுத்து விட்டனர். இதனையடுத்து பூங்காவில் ஒரு பக்கம் ஆட்டோக்களும், இன்னொரு பக்கம் காய்கறி சந்தையும் இயங்கியது.

இந்த விவகாரம் குறித்து செயல் அலுவலர் ஜெயமாலினி கூறுகையில், பூங்காவில் தற்காலிகமாக செயல்படும் காய்கறி சந்தையை மாற்றுவது குறித்து நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் வருகிற 1-ந் தேதிக்குள் காய்கறி சந்தையை பழைய இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Next Story