திருப்பத்தூரில் புதிய கூட்டுறவு மருந்தகம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்


திருப்பத்தூரில் புதிய கூட்டுறவு மருந்தகம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 27 Sept 2020 4:15 AM IST (Updated: 27 Sept 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் புதிய கூட்டுறவு மருந்தகத்தை 2 அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி வாணியம்பாடி மெயின் ரோட்டில் உள்ளது. அங்கு புதிதாக கூட்டுறவு மருந்தகம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சா.திருகுணஅய்யப்பதுரை வரவேற்றார். கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் முனிராஜ், சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் சுமைதாங்கி சி.ஏழுமலை திட்ட விளக்க உரையாற்றினார். புதிய கூட்டுறவு மருந்தகத்தை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் கே.சி. வீரமணி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கி, முதல் முதலாக ரூ.1 லட்சம் கடன் வழங்கினார். இன்று பல கோடி ரூபாய் அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு, மகளிர் சுயமாக முன்னேற வேண்டும் எனப் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசின் கூட்டுறவு மருந்தகம் மூலம் தரமான மருந்துகள் பொதுமக்களுக்கு 15 சதவீத விலை குறைப்பில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அதைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.

விழாவில் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் டாக்டர் என்.திருப்பதி, ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பி.கே.சிவாஜி, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர்கள் கே.எம்.சுப்பிரமணியம், டி.டி.சி. சங்கர், ஆர்.நாகேந்திரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஏ.ஆர். ராஜேந்திரன், துணைத் தலைவர் செல்வம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வெங்கடேசன், கற்பகம் கூட்டுறவு பண்டக சாலை துணைத் தலைவர் உமாபுகழேந்தி உள்பட பலர் பேசினர். கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான பா.ரேணுகாம்பாள் நன்றி கூறினார்.

Next Story