கண்ணில் மிளகாய் பொடி தூவி 2 பெண்கள் படுகொலை - பெலகாவி அருகே பயங்கரம்


கண்ணில் மிளகாய் பொடி தூவி 2 பெண்கள் படுகொலை - பெலகாவி அருகே பயங்கரம்
x
தினத்தந்தி 27 Sept 2020 4:46 AM IST (Updated: 27 Sept 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெலகாவி,

பெலகாவி தாலுகா கெலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ராஜஸ்ரீ(வயது 21). அதே கிராமத்தை சேர்ந்த கங்கப்பாவின் மனைவி ரோகிணி(21). இந்த நிலையில் நேற்று மாலை ராஜஸ்ரீயும், ரோகிணியும் கெலவாடி அருகே லட்சுமிநகரில் உள்ள பிரம்மதேவா கோவிலுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் ராஜஸ்ரீ, ரோகிணியை வழிமறித்து அவர்களிடம் தகராறு செய்தனர். பின்னர் 2 பேரின் கண்களிலும் மர்மநபர்கள் மிளகாய் பொடி தூவினர். இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் ராஜஸ்ரீயும், ரோகிணியும் அலறினர். அப்போது 2 பேரையும் மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் ராஜஸ்ரீ, ரோகிணி கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த கொலை சம்பவம் அறிந்த பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தியாகராஜன், பெலகாவி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜஸ்ரீ, ரோகிணியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெலகாவி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜஸ்ரீ, ரோகிணியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story