திருச்சி- விருதுநகர் ரெயில்வே பாதையை மின் பாதையாக மாற்ற காரைக்குடிக்கு வந்தது தளவாட பொருட்கள்
திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக விருதுநகர் வரையிலான ரெயில்வே பாதையை மின் பாதையாக மாற்றுவதற்காக தளவாட பொருட்கள் வந்து இறங்கி உள்ளது.
காரைக்குடி,
தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தென் மாவட்டங்களும் வருகிற 2027-ம் ஆண்டிற்குள் மின் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு தற்போது மின் பாதை இல்லாத ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வே நிலையம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்பாதையாக இல்லாத திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர் வரை உள்ள ரெயில்வே பாதைகளை மின்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான சர்வே பணி ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. பொதுவாக திருச்சியில் இருந்து விருதுநகர் வரை சுமார் 190 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.
இந்த ரெயில்வே தண்டவாள பகுதியில் மின் பாதை அமைப்பதற்காக தற்போது இரும்பு தூண்கள், மின் பாதைக்கான தளவாட பொருட்கள் ஆகியவை காரைக்குடி ரெயில் நிலையத்தில் வந்து ஜே.சி.பி. மூலம் இறக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காரைக்குடி ரெயில் நிலையத்தில் 7 தண்டவாள பாதை செல்கிறது. காரைக்குடி-திருவாரூர் புதிய ரெயில் பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது ஏற்கனவே ரெயில் போக்குவரத்து சென்றது. அதன் பின்னர் போதிய பயணிகள் கூட்டம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் பாதையை சேர்த்து மொத்தம் 6 பிளாட்பாரங்கள் காரைக்குடி ரெயில் நிலையத்தில் உள்ளது. தற்போது திருச்சி-விருதுநகர் வரையிலான இந்த மின்பாதை மாற்றும் பணி வருகிற 2023-ம் ஆண்டிற்குள் முடிக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் 80 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்க முடியும்.
இதனால் ரெயில் பயணம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது- தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி- விருதுநகர் ரெயில் தடத்தில் புதிதாக மின் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பணி இன்னும் 3 ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்படும். இதன் மூலம் இந்த பாதையில் செல்லும் ரெயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே இந்த வழித்தடத்தில் சென்னை வரை செல்லும் டீசல் ரெயில் திருச்சி வரை சென்று அதன் பின்னர் அங்கிருந்து மின்சார என்ஜின் பொருத்தப்படும் இந்த ரெயில் புறப்பட்டு செல்லும். இதனால் திருச்சி ரெயில் நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரை பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது இந்த மின்பாதை பணி நிறைவு பெற்று மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டதால் திருச்சி ரெயில்நிலையத்தில் ரெயில் என்ஜினை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் 1 மணி நேரத்திற்கு முன்னதாக சென்னைக்கு பயணிகள் சென்று விடலாம். தற்போது இந்த பணி திருச்சி-காரைக்குடி, காரைக்குடி-மானாமதுரை, மானாமதுரை-விருதுநகர் ஆகிய பாதைகளிடையே 3 கட்டங்களாக மின்மயமாக்கும் பணி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story