மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கிறது: பிரபல இந்தி நடிகைகளுக்கு சிக்கல் தீபிகா படுகோனேயிடம் 5 மணி நேரம் விசாரணை ஷரத்தா கபூர், சாரா அலிகானிடமும் கிடுக்கிப்பிடி + "||" + Drug issue Problem for famous Hindi actresses To Deepika Padukone 5 hours trial

போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கிறது: பிரபல இந்தி நடிகைகளுக்கு சிக்கல் தீபிகா படுகோனேயிடம் 5 மணி நேரம் விசாரணை ஷரத்தா கபூர், சாரா அலிகானிடமும் கிடுக்கிப்பிடி

போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கிறது: பிரபல இந்தி நடிகைகளுக்கு சிக்கல் தீபிகா படுகோனேயிடம் 5 மணி நேரம் விசாரணை ஷரத்தா கபூர், சாரா அலிகானிடமும் கிடுக்கிப்பிடி
போதைப்பொருள் விவகாரம் சூடுபிடித்த நிலையில் பிரபல இந்தி நடிகைகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நடிகைகள் தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாரா அலிகானிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.
மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் (வயது 34) மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவரது தந்தை கே.கே. சிங் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பீகார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.


அப்போது சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியாவின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த போது, அவருக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது அம்பலமானது. அதாவது தனது தம்பி சோவிக் மூலம் நடிகை ரியா போதைப்பொருளை வாங்கி தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்து உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்த போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த சிலர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் விவகாரம் பற்றியும், இந்தி திரையுலகுக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதுதொடர்பாக இந்தி திரையுலகைச் சேர்ந்த பலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பிரபல நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாராஅலிகான் ஆகியோருக்கு போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 நடிகைகளுக்கும் கடந்த புதன்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பினர்.

அதன்படி நேற்று முன்தினம் பிரபல தமிழ், இந்தி நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

இந்தநிலையில் நேற்று காலை 9.50 மணிக்கு நடிகை தீபிகா படுகோனே விசாரணைக்காக மும்பை கொலபா பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது தீபிகா படுகோனே செல்போன் வைத்திருக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

விசாரணை முடிந்து பிற்பகல் 3.50 மணி அளவில் தீபிகா படுகோனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கடந்த 2017-ம் ஆண்டில் தனது மேலாளர் கரிஷ்மா பிரகாசுக்கும் தனக்கும் இடையே போதைப்பொருள் குறித்து நடந்ததாக கூறப்படும் வாட்ஸ்-அப் உரையாடல்களை விசாரணையின் போது தீபிகா படுகோனே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் போதைப்பொருள் பயன்படுத்தியதை அவர் ஒப்புகொண்டாரா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாசும் நேற்று 2-வது நாளாகவிசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அவரும் விசாரணை முடிந்து தீபிகா படுகோனேயுடன் வெளியே வந்தார். இருவரும் தனித்தனி காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

இருவரிடமும் நேருக்கு நேர் கேள்விகள் கேட்டு விசாரணை நடந்ததாக தெரியவந்தது. தீபிகா படுகோனேயிடம் உணவு இடைவேளையை தவிர்த்து 5 மணி நேரம் விசாரணை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் நடிகை ஷரத்தா கபூர் மதியம் 12 மணிக்கும், சாரா அலிகான் மதியம் 1 மணிக்கும் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி, அவர்களுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணையின் போது அவர்கள் இருவரும் மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷரத்தா கபூர் 6 மணி நேர விசாரணைக்கு பிறகும், சாரா அலிகான் 4½ மணி நேர விசாரணைக்கு பிறகும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு தயாரிப்பாளர் கிஷிஜித் பிரசாத்தை கைது செய்தனர்.

முன்னணி நடிகைகள் விசாரணைக்கு ஆஜராக வந்ததால் கொலபாவில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போதைப்பொருள் குறித்து நடிகைகள் ரகுல்பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாராஅலிகான் ஆகியோரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. 3 நாள் விசாரணைக்கு பிறகுதான் நடிகை ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

எனவே இந்த விவகாரத்தில் சிக்கி உள்ள மற்ற நடிகைகளும் அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பிரபல இந்தி நடிகைகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு போலீசார் மீண்டும் சம்மன்
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மனைவி பிரியங்கா ஆல்வா விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
2. போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற முன்னாள் முதல்-மந்திரி யார்? அரசு பகிரங்கப்படுத்த குமாரசாமி வலியுறுத்தல்
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற முன்னாள் முதல்-மந்திரி யார்? என்பதை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.
3. போதைப்பொருள் விவகாரம்: 2 நடிகர்கள்-முன்னாள் கவுன்சிலர் போலீசார் முன்பு ஆஜர் 6 மணி நேரம் தீவிர விசாரணை
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக 2 நடிகர்கள்- முன்னாள் கவுன்சிலர் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்கள். அவர்கள் 3 பேரிடமும் 6 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
4. போதைப்பொருள் விவகாரம்: நடிகை அன்ட்ரிதா ராய்-கணவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு விசாரணைக்கு இன்று ஆஜராக உத்தரவு
போதைப்பொருள் விவகாரத்தில் இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை அன்ட்ரிதா ராய் மற்றும் அவரது கணவரும், நடிகருமான திகந்த் ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.