மக்கள் ஒத்துழைக்காதது தான் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


மக்கள் ஒத்துழைக்காதது தான் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 27 Sept 2020 6:09 AM IST (Updated: 27 Sept 2020 6:09 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஒத்துழைக்காதது தான் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்த வேண்டுகோளை ஏற்று, கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் தங்களின் ஒருநாள் சம்பளத்தை அரசுக்கு தருவதாக தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவாமல் தடுப்பதில் அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசு சார்பில் விடுக்கப்பட்டது. ஆனால் அதை மதிக்காமல் மக்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்காதது தான் தொற்று அதிகமாக பரவுவதற்கு காரணம். புதுவையில் 3 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்தால் அதை சரிசெய்வது மிகவும் சிரமம். தொற்று பாதித்தவர்களின் சிகிச்சைக்காக இதுவரை முதல்-அமைச்சர் கொரோனா நிதியில் இருந்தும் பேரிடர் துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் நிதியில் இருந்தும் மருந்துகள், உபகரணம், பணியாளர்கள் நியமனம் ஆகியவற்றை செய்து வருகிறோம். புதுவைக்கு மத்திய அரசு வழங்கிய நிதி உதவி மிகவும் குறைவாக உள்ளது.

கொரோனா மருத்துவ பணிகளுக்காக மாநில அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. ஏற்கனவே நான் வைத்த கோரிக்கைகளை ஏற்று அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் ரூ.9 கோடியே 34 லட்சத்தை வழங்கி உள்ளனர். அதில் பெருந்தொகை செலவிடப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கையை மக்கள் மத்தியில் தாக்கல் செய்துள்ளேன்.

புதுவை மாநில அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கொரோனா நிதிக்கு தருவதாக தெரிவித்துள்ளனர். நானும் எனது ஒருமாத நாடாளுமன்ற பென்ஷன் தொகையை வழங்குகிறேன். அதேபோல் சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் ஒருமாத சம்பளத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொழிற்சாலை அதிபர்கள், வியாபாரிகள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும்.

மத்திய கலாசார துறை அமைக்கப்பட்ட குழுவில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர். தமிழகம், புதுவை மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி குழுவில் நமது மாநில வல்லுனர்கள் யாரும் இடம்பெறவில்லை. இது கண்டனத்திற்குரியது. புதுவைக்கு என தனித்துவம் உள்ளது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story