சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Sept 2020 3:30 AM IST (Updated: 27 Sept 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மண்டலம் 11-வது வார்டுக்கு உட்பட்ட சின்னமேட்டுபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்புக்கு பக்கத்தில் திருவொற்றியூர் மண்டலம் சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதற்கிடையில் மக்கும் குப்பை மையத்தின் போக்குவரத்து பயன்பாட்டுக்காக தனியாருக்கு சொந்தமான குடியிருப்பின் சுற்றுச்சுவரை இடிக்க திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட குடியிருப்போர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில் நேற்று காலை இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான சுற்றுச்சுவரை இடிக்க மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதையறிந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சுவரை இடிக்க விடாமல் பொக்லைன் எந்திரத்தை தடுத்தனர்.

பின்னர் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளின் அத்துமீறிய செயலைக் கண்டித்து திடீரென்று மண்டல அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலை மறியல் செய்த பொது மக்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story