தொடர் வைப்பு திட்டத்தில் பணம் செலுத்தாதவர்கள் கணக்கு முடக்கம் - தபால்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு
தபால்துறையின் தேசிய தொடர் வைப்பு திட்டத்தில் கொரோனா ஊரடங்கால் மாதாந்திர பணம் செலுத்தாதவர்களின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரை,
தபால் நிலையங்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்கும் மையங்களாக தான் ஆங்கிலேயர்களால் நமது நாட்டில் தொடங்கப்பட்டன. ஆனால் விடுதலைக்குப்பின், தபால்துறையின் சேவை பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் தபால்துறை வங்கி சேவை வரை வழங்கி வருகிறது. தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு, தேசிய தொடர் வைப்பு சேமிப்புக்கணக்கு, தேசிய நிரந்தர வைப்பு சேமிப்பு கணக்கு, தேசிய மாதாந்திர வருவாய் சேமிப்பு கணக்கு, முதியோருக்கான சேமிப்பு கணக்கு, பொதுமக்களுக்கான பி.எப். கணக்கு, தேசிய சிறுசேமிப்பு பத்திரக்கணக்கு, கிசான் விகாஸ் பத்திரம், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி கணக்கு ஆகிய சேவைகள் உள்ளன.
இதில், தேசிய தொடர்வைப்பு சேமிப்பு கணக்கில்(ஆர்.டி.) மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.100 சேமிப்பு கணக்கில் செலுத்தலாம். இந்த தொகைக்கு உச்சபட்ச வரம்பு கிடையாது. 18 வயது நிரம்பியவர்கள் இந்த கணக்கை தொடங்கலாம். 3 பேர் இணைந்து கூட்டாக கணக்கு தொடங்கலாம். 10 வயது நிரம்பிய மைனர்கள் கணக்கு தொடங்கலாம். 18 வயது நிரம்பாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்காக பாதுகாவலர் பெயரில் கணக்கு தொடங்கலாம்.
18 வயது நிரம்பியவுடன் கணக்கை மாற்றியமைக்க விண்ணப்பிக்க வேண்டும். இந்த கணக்கு தொடங்கியவர் தனக்கு பின்னர் பணத்தை பெறுவதற்கான நபரை பரிந்துரைக்கலாம். ஆனால், இந்த கணக்கை தொடரமுடியாவிட்டால் 3 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த கணக்கை பொறுத்தமட்டில் சாதாரண சேமிப்பு கணக்கை போல ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு பின்னர், செலுத்திய தொகையில் இருந்து 50 சதவீதத்தை கடனாக பெறலாம்.
5 வருடங்களுக்கு பின்னர் வாடிக்கையாளர் விரும்பினால் மேலும் 5 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த கணக்கை நீட்டிப்பு செய்ய முடியும். இந்த கணக்கில் 6 மாதங்களுக்கான தவணையை முன்னதாக செலுத்தி விடலாம். இதற்கு குறிப்பிட்ட தொகை சலுகையாக வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் மாதாந்திர வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத்தவறினால், ரூ.100- க்கு ஒரு ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். தொடர்ந்து 4 முறை குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை செலுத்தாவிடில், கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதற்கு 2 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னரும், தவணைத்தொகையை அபராதத்துடன் செலுத்தாவிடில் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும்.
இந்தநிலையில், கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அனைத்து வங்கி சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், தபால் நிலையங்கள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. அதேபோல, வங்கி தொடர்பான சேவை அனைத்திலும் கால அவகாச சலுகை வழங்கப்பட்டது. ஆனால், தபால்நிலையத்தில் இந்த தேசிய தொடர் சேமிப்பு கணக்குக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. ஊரடங்கால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் இதுபோன்ற கணக்குகளில் மாதந்தோறும் பணத்தை செலுத்துவது சாத்தியமில்லை.
இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் இந்த கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோரின் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த தயாராக இருந்தும், ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாமல் உரிய நேரத்தில் பணத்தை செலுத்த முடியவில்லை. ஆனால், அவர்களின் கணக்கை முடக்கியுள்ளது தபால்துறை மீது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சிலருக்கு 3 வருடங்கள் முடிவடையாததால் செலுத்திய பணத்தை திரும்ப பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தபால்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, கொரோனா ஊரடங்கு காலத்தில் பணம் செலுத்த முடியாமல் போன வாடிக்கையாளர்களுக்கு காலநீட்டிப்பு சலுகை வழங்கி கணக்கை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story