மாநில வளர்ச்சி குழு துணைத்தலைவர் நிதி திட்ட செயல்பாடுகளை காணொலி காட்சியில் ஆய்வு - கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்பு


மாநில வளர்ச்சி குழு துணைத்தலைவர் நிதி திட்ட செயல்பாடுகளை காணொலி காட்சியில் ஆய்வு - கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Sep 2020 10:15 PM GMT (Updated: 27 Sep 2020 1:57 AM GMT)

மாநில நிதி திட்ட செயல்பாடுகள் குறித்து மாநில வளர்ச்சி குழுவின் துணைத்தலைவர் பொன்னையன் காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.இதில் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்றார்.

ராமநாதபுரம்,

மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் கீழ் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பங்கேற்றார். மாநில வளர்ச்சி கொள்கை குழுவால் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி என்ற திட்டம் 105 பின்தங்கிய வட்டாரங்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதியை முன்னேற்றம் அடைய செய்வதற்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தனிநபர் வருமானம், வறுமை ஒழிப்பு, தொழில்துறை முன்னேற்றம் ஆகிய திட்டங்கள் குறித்த கருத்துகளை மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு அனுப்பி அக்குழுவின் நிதி உதவியோடு பல்வேறு திட்டங்களை திறம்பட செயலாக்கம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, மண்டபம், போகலூர், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி மற்றும் கடலாடி ஆகிய 7 வட்டாரங்கள் பின்தங்கியவை என கண்டறியப்பட்டு அதற்கான வளர்ச்சி திட்டங்கள் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் பற்றிய ஆய்வு மாநில வளர்ச்சிக்கொள்கை குழுவின் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த குழுவின் உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் முன்னிலை வகித்தார். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் சமர்ப்பித்தார்.

மேற்கண்ட ஆய்வில், திட்டங்களை உரிய காலத்தில் முடிக்க வேண்டிய அவசியம் பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் துணைத் தலைவர் விரிவாக எடுத்துக்கூறி மாவட்ட கலெக்டர்களை திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் இயக்குனர் மற்றும் ஊரக வளர்ச்சி குழும தலைவர் சஜீவனா மற்றும் முதுநிலை திட்ட அலுவலர் கிருபா, மாநில வளர்ச்சி கொள்கைகுழு துணைத் தலைவரின் சிறப்பு நேர்முக உதவியாளர் ஜெகன் மோகன் ஆகியோர் காணொலி காட்சி ஆய்வில் சென்னையில் இருந்து கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட திட்ட அலுவலர் ரகுவீரகணபதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Next Story