விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: செஞ்சியை சேர்ந்த கணினி மைய உரிமையாளர் கைது


விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: செஞ்சியை சேர்ந்த கணினி மைய உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2020 4:00 AM IST (Updated: 27 Sept 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட செஞ்சியை சேர்ந்த கணினி மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

தமிழகத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் என்ற விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்தவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித்தொகை திரும்ப பெறப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் பட்டியலை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி புதிதாக சேர்க்கப்பட்ட 1 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேரில் இம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளே அல்லாதவர்கள் 70 ஆயிரம் பேரும், இதுதவிர வெளிமாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் பேரும் என 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் போலியான முறையில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் வங்கி கணக்கின் மூலம் ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளது தெரியவந்தது.

இவர்களில் இதுவரை விவசாயிகளே அல்லாதவர்கள் 40 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.12 கோடி திரும்ப பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஒருபுறம் இருக்க முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இவர்களுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் வல்லம் வட்டாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி அலுவலர்கள் 2 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 7 பேர் என 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் செஞ்சி நெகனூரை சேர்ந்த கணினி மைய உரிமையாளரான லோகநாதன் (வயது 35) என்பவர் செஞ்சி வட்டாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் செஞ்சி வட்டார பகுதியை சேர்ந்த 3,500 பேரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்த்து பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, லோகநாதனை போலீசார் கைது செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story