விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு அரசு பஸ் கண்டக்டர் சாவு - கள்ளக்குறிச்சியில் பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது


விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு அரசு பஸ் கண்டக்டர் சாவு - கள்ளக்குறிச்சியில் பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 27 Sept 2020 4:00 AM IST (Updated: 27 Sept 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,044 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 95 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 10,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 945 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே ராகவன்பேட்டையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 600-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு, விக்கிரவாண்டி கூட்டுறவு வங்கி அலுவலர், மாவட்ட நூலக அலுவலக ஊழியர் உள்பட 161 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,054 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 8,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8348 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 1819 நபர்களின் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 38 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9007ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story