இயற்கை இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க நீலகிரியில் 2,529 பொறுப்பாளர்கள் நியமனம் - கண்காணிப்பு அதிகாரி தகவல்


இயற்கை இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க நீலகிரியில் 2,529 பொறுப்பாளர்கள் நியமனம் - கண்காணிப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2020 3:30 AM IST (Updated: 27 Sept 2020 9:49 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் வடகிழக்கு பருவமழையின் போது இயற்கை இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க 2,529 முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் இன்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு இன்கோசர்வ் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை அலுவலர்கள் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்றவாறு அப்பகுதிகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய 42 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் மழைநீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்களில் கழிப்பறை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை அலுவலர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

நீலகிரியில் இயற்கை இடர்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க முதல்நிலை பொறுப்பாளர்கள் 2, 529 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அபாயகரமான இடங்களாக 283 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. அப்பகுதிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அபாயகரமான மரங்கள் இருந்தாலோ அல்லது இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் ஏதேனும் இருந்தாலோ மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இயற்கை பேரிடர் ஏற்படும்போது பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நடத்த வேண்டும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கண்காணிப்பு அதிகாரி பேசும்போது, கொரோனா தொற்று கிராமப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. அரசு தெரிவித்த வழிமுறைகளை அலுவலர்கள் தொடர்ந்து பின்பற்றி தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து, அவர்களுடன் தொடர்புடைய முதல் நிலை தொடர்பாளர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்றார். இதில் சப்-கலெக்டர்கள் ரஞ்சித்சிங், மோனிகா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story