திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து 2 பேர் படுகாயம் - வாகன ஓட்டிகள் பீதி


திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து 2 பேர் படுகாயம் - வாகன ஓட்டிகள் பீதி
x
தினத்தந்தி 27 Sept 2020 11:45 AM IST (Updated: 27 Sept 2020 11:48 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலம், கடந்த 1998-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். முறையான பராமரிப்பு பணி இல்லாததால், பாலம் அதன் உறுதி தன்மையை இழந்து வருகிறது. குறிப்பாக பாதசாரிகள் நடந்து செல்வதற்காக இருபுறமும் போடப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் பல்வேறு இடங்களில் சேதமடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது.

இதனால் பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் பாலத்தின் தடுப்புச்சுவர்களில் பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அந்த பாலத்தை கடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 20), மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த அர்ஜூன் (36) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நாகல்நகர் பாலத்தை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தடுப்புச்சுவரில் இருந்த சிமெண்டு பூச்சு பெயர்ந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர்கள் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.

பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடுப்புச்சுவரின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்ததால் அவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதுவே தடுப்புச்சுவர் முழுமையாக பெயர்ந்து விழுந்திருந்தால் 2 பேரும் பெரும் விபத்தில் சிக்கியிருப்பார்கள். எனவே பலமற்ற நிலையில் உள்ள மேம்பாலத்தை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story