திருச்சியில் வீட்டோடு மாப்பிள்ளையாக மறுத்த வாலிபரின் மண்டை உடைப்பு மாமனார், மாமியார் மீது வழக்கு


திருச்சியில் வீட்டோடு மாப்பிள்ளையாக மறுத்த வாலிபரின் மண்டை உடைப்பு மாமனார், மாமியார் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Sept 2020 5:27 PM IST (Updated: 27 Sept 2020 5:27 PM IST)
t-max-icont-min-icon

வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க மறுத்ததால், புதுமாப்பிள்ளையின் மண்டை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி கே.கே.நகர் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் சகாயஸ்டீபன் எட்வர்டு (வயது 29). இவருக்கும், எடமலைப்பட்டிபுதூர் ரெயில்வே காலனியை சேர்ந்த ஆரோக்கியநாதன்- சகாயகாந்தி ஆகியோரின் மகள் டயானாவுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் ஆன நாள் முதல் சகாயஸ்டீபன் எட்வர்டை, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க மனைவி டயானா மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் வற்புறுத்தி வந்தனர். அதற்கு, அவர் உடன்பட மறுத்து வந்துள்ளார்.

மண்டை உடைப்பு

இந்த நிலையில், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதிக்காததால் டயானாவுக்கு கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், டயானா கோபித்துக்கொண்டு எடமலைப்பட்டிபுதூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த 17-ந் தேதி சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்தி கே.கே.நகரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சகாயஸ்டீபன் எட்வர்டு மாமனார் வீட்டுக்கு சென்றார்.

அங்கு வீட்டின் அருகே நின்று கொண்டு மனைவியை செல்போனில் அழைத்து பேசி இருக்கிறார். அதையறிந்து அங்கு வந்த மாமனார் ஆரோக்கியநாதன், தனது மருமகனை கற்களால் தாக்கி புதுமாப்பிள்ளை என்றும் பார்க்காமல் அவருடைய மண்டையை உடைத்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மாமியார் சகாயகாந்தியும் உடந்தையாக இருந்துள்ளார்.

மாமனார், மாமியார் மீது வழக்கு

இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ், புதுமாப்பிள்ளையின் மண்டையை உடைத்ததாக மாமனார், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story