நெல்லை அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.5¼ லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


நெல்லை அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.5¼ லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Sept 2020 3:30 AM IST (Updated: 28 Sept 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டில் ரூ.5¼ லட்சம் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மானூர்,

மானூரை சேர்ந்தவர் இசக்கி நாயுடு (வயது 74). ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர். அவருடைய மனைவி வினோதினி (70). இவரும் ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம்போல் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக கையை நுழைத்து உட்புறமாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர். தனித்தனி அறைகளில் இருந்த இரண்டு பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணம் ரூபாய் ஒரு லட்சம் மற்றும் 3 பவுன் தங்க சங்கிலி, 2 பவுன் தங்க டாலர் சங்கிலி, 4 பவுன் தங்க வளையல்கள் 2, ஒன்றரை பவுன் தங்க ஜோடி கம்மல், 5 சிறிய தங்க மோதிரங்கள் அடங்கிய மொத்தம் 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நகைகளின் மதிப்பு ரூ.4.20 லட்சம்.

காலையில் எழுந்து பார்த்த தம்பதிகள், பீரோக்கள் திறந்து கிடந்ததையும், தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மானூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தடயவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், அங்கிருந்த கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தார்.

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார். இச்சம்பவத்தில் கதவின் பூட்டையோ, பீரோக்களின் பூட்டையோ உடைக்காமல் சாவியை உபயோகித்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Next Story