மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து விடும் - ரூபி மனோகரன் பேட்டி


மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து விடும் - ரூபி மனோகரன் பேட்டி
x
தினத்தந்தி 28 Sept 2020 4:15 AM IST (Updated: 28 Sept 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து விடும் என்று ரூபி மனோகரன் கூறினார்.

நெல்லை,

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், காங்கிரஸ் பிரமுகருமான ரூபி மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கொரோனா தொற்று குணமடைந்து நேற்று நெல்லை வந்தார். முன்னதாக அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பாளையங்கோட்டையில் ரூபி மனோகரனை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். பின்னர் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி இளைஞர்கள் ரூபி மனோகரன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு ரூபி மனோகரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லபாண்டியன், வர்த்தக காங்கிரஸ் மாநில செயலாளர் சந்திரசேகரன், வட்டார தலைவர்கள் ரவீந்திரன், அலெக்ஸ், டியூக் துரைராஜ், ஓ.பி.சி. பிரிவு மாநில செயலாளர் ஜெய்சன் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ரூபி மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் தற்போது குணமடைந்து, நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். இங்கு காங்கிரசார் அளித்த உற்சாக வரவேற்பு எனக்கு புதுதெம்பை கொடுத்துள்ளது.

நாங்குநேரி தொகுதி மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன். விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் என்னை முழுமையாக அர்ப்பணித்து தொண்டாற்றுவேன். நாங்குநேரி தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முழுமையாக உழைப்பேன். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நிரூபித்து காட்டுவேன். தற்போது காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கிராமம் கிராமமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படும். இந்த சட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாளை (அதாவது இன்று) பரப்பாடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.

மத்திய அரசு வேளாண் மசோதா, புதிய கல்விக்கொள்கை என மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. பா.ஜனதாவில் குற்றப்பின்னணி உள்ளவர்கள்தான் உறுப்பினராக சேர்ந்து வருகிறார்கள். பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

வேளாண் மசோதாவால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்புடையதாக இல்லை. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கட்சி மேலிடம் யாரை வேட்பாளராக நிறுத்துமோ, அவர்தான் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுவார். நான் நாங்குநேரி தொகுதிக்குதான் சேவை செய்வதற்காக வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story