ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தத்திற்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவு முழு அடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்


ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தத்திற்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவு முழு அடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Sept 2020 4:59 AM IST (Updated: 28 Sept 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தத்திற்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், முழு அடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நிலச்சீர்திருத்தம் மற்றும் ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தங்களுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

விவசாய சங்கங்களின் தலைவர்கள், என்னை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்கள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினேன். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நாட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வகையில் ஏ.பி.எம்.சி. சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தான் விவசாயிகளின் கோரிக்கையாகும் இருந்தது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்கும் உரிமை, சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தத்தால் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

90 சதவீத விவசாயிகள் ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜனதா அரசும், பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பிரதமர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தத்தால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும். இந்த விவகாரத்தில் சிலர் விவசாயிகளை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். எனவே விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story