பட்டுக்கோட்டை அருகே மாணவனின் கை விரல்களில் 50 கார்களை ஏற்றி சாதனை முயற்சி


பட்டுக்கோட்டை அருகே மாணவனின் கை விரல்களில் 50 கார்களை ஏற்றி சாதனை முயற்சி
x
தினத்தந்தி 28 Sep 2020 2:24 AM GMT (Updated: 28 Sep 2020 2:24 AM GMT)

பட்டுக்கோட்டை அருகே 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது கைவிரல்களில் 50 கார்களை வரிசையாக ஏறி, இறங்க செய்து புதிய உலக சாதனைக்கு முயற்சியை மேற்கொண்டான்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி வேம்பு. இவர்களுடைய மகன் நாராயணமூர்த்தி (வயது10). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். உலகம் முழுவதும் கொரோனாவால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவன் நாராயணமூர்த்தி, கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது உடலையே வருத்திக்கொண்டு புதிய உலக சாதனை முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டான். அதன்படி நேற்று நாராயணமூர்த்தி துவரங்குறிச்சி பட்டுக்கோட்டை அருகே முக்கூட்டு சாலையில் அமர்ந்து கொண்டான். பின்னர் தனது 2 கைகளின் விரல்களில் 50 கார்களை வரிசையாக அணிவகுக்க செய்தான். 25 நிமிடங்களில் 50 கார்களும் மாணவனின் கை விரல்களில் ஏறி, இறங்கின.

பாராட்டு

கொரோனாவுக்காக தனது உடலை வருத்திக்கொண்ட மாணவனை அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் பாராட்டினர். முன்னதாக இந்த நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தொடங்கி வைத்தார்.

டாக்டர்கள் நியூட்டன், சதாசிவம், தற்காப்பு கலை பயிற்சியாளர் இளையராஜா மற்றும் துவரங்குறிச்சி, தாமரங்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் நாராயணமூர்த்தியை பாராட்டி பரிசுகள் வழங்கினர். கார்களை விரலில் ஏற்றி சாகசம் செய்த மாணவன் தற்காப்பு கலை பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story